இந்தியாவின் வளர்ச்சிகளும் அதன் இலக்குகளும் கடந்த சில காலங்களில் மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட பல அயல் நாடுகளுக்கு ஆச்சர்ய மூட்டுவதாகவும் அருகாமையில் உள்ள போட்டி நாடுகளுக்கு அச்சமூட்டுவதாகவும் தான் இருக்கும் எனத் தெரிகிறது.
தொழில், வணிகத்துறைகளில் உள்ளுரிலும் கடல் கடந்தும் சிறப்பான முத்திரை களை பதிவு செய்து வருவதுடன் சிறந்த வியாபார சந்தையாகவும், மருத்துவ சேவைமையமாகவும் உருவெடுத்துள்ளது. இவை மட்டுமல்ல. மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டுள்ள நாடாகவும் இந்தியா இன்றளவில் காணப்படுகிறது.
இந்தியாவின் வருங்கால வளர்ச்சி கட்டங்களில் இன்றைக்கு மிகவும் கவனிக்க வேண்டியதாக இருப்பது 2024 ஆண்டளவில் அது திட்டமிட்டுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அது சார்ந்த முதலீடு. அடுத்த ஐந்தாண்டுகளில் 100 கூடுதலான விமான நிலையங்களை அமைக்க எண்ணம் கொண்டுள்ள இந்தியா இதற்காக 1 இலட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய உள்கட்டமைப்பு வசதிகளை விரிவு படுத்துவதன் ஒரு முயற்சியாக அமைந்துள்ள இத்திட்டம் சிறு நகரங்கள் , கிராமங்களையும் இணைக்கும் 1000 புதிய வழித்தடங்களை உள்ளடக்கியதாம்.
உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி அதன் வாயிலாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் கார்ப்பரேட் வரி விகிதங்களை பிற ஆசிய நாடுகளுடன் போட்டி போடுவதற்கு ஏதுவாக அரசு குறைத்துள்ளது.
இதன் மூலம் இப்போதைக்கு இந்தியாவை விட விமானத்துறையில் சிறந்து விளங்கும் சீனாவுக்கு வருங்காலங்களில் சவாலாக இந்தியாவும் உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது என்கிறார் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தினைச் சார்ந்த செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர்.
இந்த திட்டமானது வெறும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவக் கூடியது மட்டுமில்லை. இதன் மூலம் விமானத்துறை அது சார்ந்த பிற துறைகளில் வேலை தொழில் வாய்ப்புகள் பெரிதும் உருவாகும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக விமான சேவை நாடு முழுக்க சிறப்பாக விரிவ டையும் என உறுதியாக பேசப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வின் 450 விமான ஓடுதளங்களில் 75 மட்டுமே செயல்பாட்டில் இருந்தன.
ஆனால் உள்ளடங்கிய பகுதிகளுக்கான சேவையினால் இழப்பை சந்திக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவக்கூடிய வகையில் மத்திய அரசு அண்மையில் உருவாக்கிய ஒரு மானிய திட்டம் மேலும் பல ஒடுதளங்கள் இயங்க வழிவகுத்துள்ளதாம்.
இதேபோல விமான நிறுவனங்களுக்கு மேலும் 60க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு விமான சேவையை இயக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் நடுத்தட்டு மக்களின் விமான பயணங்கள் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக சிங்கப்பூர் ஏாலைன்ஸ் ஏர்ஏசியா போன்ற விமான நிறுவனங்கள் உள்ளூர் சேவை நிறுவனங்கள் தொடங்க தயாராகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து விமானத் துறையின் பெரிய சுமையாக இருக்கும் எரிபொருள் விலைகளை திருத்தி அமைக்கும் ஒரு எண்ணமும் அரசிடம் உருவாகியுள்ளதாக சில விவரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டளவில் விமான எரி பொருளின் அதிக விலைக்கு மூலக் காரண மான மாகாணவரிகளைத் தளர்த்த அரசு தயாராகி வருவதாகத் தெரிகிறது. விமானத் துறையின் வளர்ச்சியை சிறப்பாக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே விமான நிலையங்களை குத்தகைக்கு விடும் செயல் பாடுகளை அதிகரித்துள்ளது.
விமானப் பயண சேவைகளை எளிதாக்கும் விதமாக சமீபமாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சார்ந்த பரிசோதனை சம்பிர தாயங்களில் கூட சில தளர்வுகளை தொடர்ந்து செய்ய ஆர்வம் காட்டப்படுகிறது. பொது அறிவிப்புகளை முதலில் உள்ளூர் மொழியில் அறிவுக்குமாறும் அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விமான சேவையானது தனி நபர்களின் அலுவல் ரீதியான குடும்ப ரீதியான பயணம்என்பதற்கு அப்பாற்பட்டு நாட் டின் இறக்குமதி, ஏற்றுமதி வணிகத்திற்கும் அச்சாரம் என்ப தால் விமான சேவைகளை மேம்படுத்தவேண்டிய கட்ட யம் வளரும் நாடான இந்தியாவுக்கு எப்போதுமே இருக்கிறது. அந்த வகையில் நவீன இந்தியாவில் விமான நிலையங்களை பெருக்குவது. சிலவற்றை தனியார் மயமாக்குவது ஆகிய முயற்சிகள் மிகவும் வரவேற்கதக்கது தான் என துறை ஆய்வாளர்கள் சிலரும் கூறுகின்றனர்.
விமானத்துறையில் ஏற்பட இருக்கும் எதிர்கால மாற்றங்களை கருத்தில் வைத்து இந்தியாவின் பாரம்பரிய மற்றும் முன்னணி தொழில் குழுமமான டாடா நிறுவனம் விமான நிலையத் தொழிலில் தனது கணக்கை தொடங்க பெரிதும் ஆயத்தமாகி வருகிறது.
விமானத்துறை சார்ந்த உணவு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் இடம் பிடித்துள்ள போதிலும் இதுவரை விமான நிலைய செயல்பாடுகளில் இல்லாத டாடா குழுமம் விமானநிலைய தொழில் வாய்ப்பை பெறும் சூழலும் உருவாகியுள்ளது.
விமானத்துறை சேவைகளில் முன்னணி நிறுவனமான ஜிஎம்ஆர் நிறுவனத்தின் மூலம் இந்த வாய்ப்பு டாடாவுக்கு கை கூடும்பட்சத்தில் மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் வருகையும் இத்தொழிலில் பெருகி விமானப் போக்குவரத்து தொழிலில் மேலும் விறுவிறுப்பு கூடும்.
இதன் விளைவாக இந்தியாவின் பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மிக சிறப்பாக மேம்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- வேணி.