இந்திய விவசாயத்தின் நிகழ்காலம் நம் முன்னோர்கள் காலம் போன்று பிரகாச மானதாக இல்லாமல் பிரச்சனைகள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனால் வருங் காலம் மீண்டும் வளமான காலமாக நிச்சயம் அமையக்கூடும் எனத்தெரிகிறது. எப்படி எனில் அண்மை காலமாக நாடு முழுக்க பலரும் இயற்கை விவசாயத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
ஒரு சிலர் பறவை, விலங்குகளுடன் கூடிய பண்ணைத் தொழிலாக விவசாயத்தை அணுகுகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரை நடமாடும் ஏடிஎம்கள் எனப்படும் கால்நடைகள் கிராமப் புறங்களில் இலவச மாக அளிக்கப்படுவதன் மூலம் ஒரு நம்பிக்கை அலை எழுந்துள்ளது. இது தவிர இந்திய வேளாண்மையின் பலமான பகுதி யாக சிறு தானிய சாகுபடி தலையெடுக்க தொடங்கியுள்ளது.
எனவே நம்பிக்கையிழந்து அச்சம் கொண்டிருக்கும் விவசாயிகள் விவசாயத்தின் இன்றைய பாசிட்டிவ் பக்கங்களை உற்றுநோக்க வேண்டும். குறிப்பாக நவீன கால விவசாயத்தின் மிகப்பெரிய நம்பிக்கை யாக எழுந்துள்ள சிறுதானிய சாகுபடி பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினாலே போதும் என்கிறார்கள் துறை வல்லுனர்கள்.
சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது. சிறு தானியங்களிலிருந்து பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமின்றி சிறுவர்களுக்கான நொறுக்கு தீனிகள், இனிப்புகள் உள்ளிட்ட பல உணவுகள் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பை ஈட்டி வருகின்றன.
இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து என உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறு தானியங்களில் நிறைந்திருப்பதால் சிறு தானிய உணவு கலாச்சாரம் பெருகத் தொடங்கியுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறுதானிய உணவு பழக்கத்தை சீரழிக்க, சிதறடிக்கத் தான் அன்னிய நிறு வனங்கள் ஓட்ஸ் உணவை இங்கு தொடர்ந்து பரப்பி வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஓட்ஸ் நம் நாட்டில் பெரிய நிறுவனங்கள் மூலம் கவர்ச்சியாக விளம் பரங்கள் வாயிலாக வர்த்தகம் செய்யப் படுகிறது. உலகின் மிகச் சிறந்த சத்துணவாக இது ஊதி பெரிதாக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் இதனை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த ஒரு சிறுதானியம் நம்மிடம் உள்ளது. அது குதிரைவாலி, ஓட்சைக் காட்டிலும் கூடுதல் சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்தது இந்த சிறுதானியம்.
வெளி நாடுகளின் சத்துணவுகளான ஓட்ஸ் உள்ளிட்ட பலவற்றின் மவுசு மெல்ல, மெல்ல சுருங்கத் தொடங்கிவிட்டது எனக் கணக்கெடுப்புகள் பல தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது கொல்லிமலை, ஜவ்வாதுமலை, விருதுநகரின் காரியாபட்டி, அருப்புக் கோட்டை பகுதிகள், மதுரை மாவட்டத்தின் கன்னிக்குடி, திருமங்கலம், உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, பேரையூர் என சிறுதானிய சாகுபடிக்கு பிரசித்தி பெற்ற இடங்கள் தவிர மேலும் பல இடங்களிலும் சிறுதானிய சாகுபடி பரவத் தொடங்கியுள்ளது.
இதில் குதிரைவாலி வளர்ப்பு மிகவும் விறுவிறுப்படைந்துள்ளது. காரணம், மலட்டுத்தரை அல்லது தரிசு நிலம் எனப்படும் சத்தில்லாத நிலங்களிலும் கூட ஏக்கருக்கு 800 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியதாக அது இருப்பதுதான்.
குதிரைவாலியின் இது போன்ற சிறப்பு களால் மேலும் இதனையும் மற்ற சிறு தானியங்கள் சாகுபடியையும் ஊக்குவிக்க வேண்டிய ஒரு கட்டாயமும் எழுந்துள்ளது. அரசு தரப்பில் இந்த ஊக்குவிப்பு பணி பெரிய அளவில் செய்யப்படாததால் சில தனிப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்புகளும் வேளாண் தொழில் சார்ந்த மேம்பாட்டு மையங்களின் கூட்டு செயல்பாட்டில் சிறுதானிய சாகுபடிக்கு சிறப்பான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
காரியாப்பட்டி சிறுதானிய உழவன் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பு காரியாப்பட்டி, நரிக்குடி, ஆவியூர், மல்லாங் கிணறு, முடுக்கன் குளம் உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த 800 சிறுதானிய விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டமைப் பாக உள்ளது. இவ்வமைப்பு அதன் உறுப்பினர் விவசாயி களுக்கு சிறு தானிய விதை உற்பத்திக்கு வழி காட்டுகிறது.
இது தவிர இந்த அமைப்பு விவசாயிகளுக்கு கோவலங்குளம் வேளாண் அறிவியல் மையத்தின் வரிகாட்டுதலின் அடிப்படையில் சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது. இது தவிர இந்த அமைப்பு மூலம் குதிரைவாலி புழுங்கல் மற்றும் பச்சரிசி வகைகள் குதிரைவாலியில் இருந்து குக்கிஸ் போன்ற நொறுக்கு தீனி வகைகளும் உற்பத்தி செய்து வர்த்தகம் செய்யப்படுகிறது.
குதிரைவாலி மழையைச் சார்ந்த பயிர். இதனை கரிசல் நிலத்தில் பயிர் செய்வதில் கூடுதல் நன்மை உண்டு . கரிசல் மண் மழைநீரை இருப்பு வைத்துக் கொண்டு சிறப்பான விளைச்சலைத் தந்துவிடும்.
குதிரைவாலி வளர்ப்புக்கு வீட்டு எருவும், குப்பையுமே உரமாகக் கொடுக்கலாம். குதிரைவாலி சாகுபடியில் மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் பூச்சி பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
இந்த வகையில் சிறப்பான பலன்களுடன் கணிசமான ஆதரவுகளுடன் குதிரைவாலி சாகுபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. இதே போன்று பிற தானியங்கள் சாகுபடியும் மறுபக்கம் வேகமெடுத்து வருவதாகவே துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே அயல் நாட்டு உணவுகளுக்கு சவால்விடக் கூடியதாகவும் உள் நாட்டு உணவு உற்பத்தியில் மறுமலர்ச்சியை ஏற் படுத்தக் கூடியதாகவும் உள்ள சிறு தானியங்கள் சாகுபடியை சீர்தூக்கிப் பார்த்து நொடிந்து கிடக்கும் நம் விவசாயிகள் வீறு கொண்டு எழுந்து சிறுதானியங்கள் சாகுபடி முதல் பலதரப்பட்ட பயிர் வளர்ப்பை நம்பிக்கையுடன் தொடரலாம் என்கிறர்கள் விவசாய ஆர்வலர்கள்.
- சி.வேலுமணி.