கற்பக தருவான பனை மரத்தால் எண்ண ற்ற பயன்கள். பதநீர், கள், நொங்கு, என பனையின் பயன்களில் அதன் ஒலைகளும் மக்களுக்கு பல வகைகளில் பயனளிக்ககூடிய ஒன்று தான். பனை ஒலைகளால் உருவாக்கப்படும் குடிசைகள் நன்கு குளிர்ச்சி தருவதோடு பல ஆண்டுகள் சிதிலமடையாமல் இருக்கும் என்பார்கள்.
ஒலைகளை எரிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் அதைக்கொண்டு அழகிய கைவினைப்பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்துகிறார் சுப்புத்தாய். தமிழ் தொழில் உலகத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு.
என் பெயர் சுப்புத்தாய். திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் எனது ஊர். எனது சிறு வயதிலேயே கைவினைப்பொருட்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. வீட்டில் கிடக்கும் பனை ஓலைகளைக் கொண்டு பெட்டி செய்துள்ளேன். எனது திருமணம் வரை ஆர்வம் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டேன்.
திருமணத்திற்குப் பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயான பின் மகளிர் குழுக்களில் சேர்ந்தேன். எங்கள் கிராமத்தில் கள கிராமத்தில் நடக்கும் பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன். திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தினர் எனது கிராமத்தில் 5 - எனது கிராமத்தில் நாட்கள் பயிற்சி நடத்தினார்கள்.
1981 ல் நடந்த இந்த பயிற்சியில் குடும்ப பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே ஒய்வு நேரத்தில் தையல், எம்பிராயிடிங், பனை ஒலைகளில் பெட்டி செய்தல், கூடை பின்னுதல் போன்ற வேலைகளை ஒய்வு நேரத்தில் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி நடத்தினார்கள்.
நானும் ஆவலோடு 5 நாட்கள் நடந்த அந்த பயிற்சியில் கலந்து கொண்டேன். இயற்கையிலேயே எனக்குள் கிடந்த ஆர்வம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. எனது ஆர்வத்தைக் கண்ட அந்த அமைப்பினர் என்னை மேலும் உற்சாகப்படுத்தினார்கள். பல பயிற்சிகளில் கலந்து கொண்டேன்.
பனை ஓலைகளைக்கொண்டு அற்புத மான தயாரிப்புகளில் கைதேர்ச்சி பெற்றேன். 25 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள் ளேன். என்று கூறும் சுப்புத்தாய் தனது தயாரிப்புகளை நம்மிடம் காட்டினார்.
இயற்கை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில திறமைகளை கொடுத்துள்ளது . சரியான வழிகாட்டுதல்கள், ஆர்வம் இருந்தால் பெண்கள் எந்த துறையிலும் சாதிக்கலாம். மிகக் குறைந்த கல்வித்தகுதி இருந்தும் சுப்புத்தாய் மாநிலத்தில் எங்கு கண்காட்சி நடந்தாலும் முதல் நபராக தனது தயாரிப்புகளைக்கொண்டு சென்று விற்பனை செய்கிறார். பல பாராட்டுக்களை அள்ளுகிறார்.
இவரது ஆர்வத்தை மேலும் உற்சாகப்ப படுத்த பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்காக இவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. பல ஆயிரம் பெண்களுக்கு பனை ஒலைகளைக் கொண்டு செய்யப்படும் அழகிய கைவினைப்பொருட்களை தயாரிக்கும் முறையை கற்றுக்கொடுத்து வரும் சுப்புத்தாயிடம் இதற்கு அடுத்த கட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டோம்.
மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த எனக்கு பெரிய அளவில் உதவி செய்ய யாரும் இல்லை. வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் பெரிய முயற்சிகளை கைவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் பரவலாக இவர் ஒரு பயிற்சியாளராக தொடர்ந்து பணி செய்து வருகிறார்.
இவரது திறமையையும் ஆர்வத்தையும் பாராட்டிமாநில அரசு சிறந்த பூம்புகார் கைவினை கலைஞர் என்ற விருது கொடுத்து இவரை கௌரவப்படுத்தியுள்ளது. அழிந்து வரும் பனைத்தொழில் மற்றும் அதன் பொருள் உற்பத்தி முறைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுப்புத்தாய் அதற்காக மாவட்ட ஆட்சியரின் உதவியை நாடியுள்ளார்.
நிறைய பெண்களுக்கு பனை ஒலைகளைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்களை செய்வது எப்படி என்ற பயிற்சி அளித்து நாடு முழுவதும் எல்லோரும் பனை ஓலைப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் தன் குறிக்கோள் என்று சொல்லும் சுப்புத்தாயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
னை ஒலைகளைக் கொண்டு அழகிய விசிறி, பெட்டி, பைகள், சின்ன பெட்டிகள் என 30க்கும் மேற்ப்பட்ட பனை ஒலைப் பொருட்களை சுப்புத்தாய் செய்து வருகிறார்.
என்றுமே அழியாத கற்பக விருட்சமான பனையின் மகத்துவத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சுப்புத்தாய் போன்ற கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். வெறும் விருதுகள் மட்டும் ஒரு கலைஞனை கௌரவப்படுத்தாது. ஒரு கலைஞனின் படைப்பாற்றலால் உருவான பொருட்கள் விற்பனையாகவேண்டும்.
அவன் மேலும், மேலும் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். பலருக்கு அவன் வேலை வாயப்பு அளிப்பவனாக மாறவேண்டும். பொருளாதார ரீதியாக தானும் உயர்ந்து மற்றவர்களையும் அவன் உயர்த்த வேண்டும். இதற்கு உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் சந்தையிடப்படவேண்டும்.
சுப்புத்தாய் போன்ற கலைஞர்கள் தொடர்ந்து ஊக்கவிக்கப்படவேண்டும். சிறிய அளவில் கடனுதவி, பொருட்கள் உற்பத்தி செய்ய சிறிய அளவில் இடம் என சுப்புத்தாய் அரசின் கருணைப்பார்வையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். தமிழ் தொழில் உலகம் சார்பில் சுப்புத்தாயின் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியடையும் என வாழ்த்தி விடை பெற்றோம்.
தமிழ் நாட்டின் பாரம்பரிய கலாச்சார பின்னணி கொண்ட பனை பொருட்களை எல்லா மக்களும் பயன்படுத்தும் வண்ணம் அரசு பனை மரங்களை நடுவது, பனைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை அரசே சந்தைப்படுத்துவது போன்ற பணிகளை செய்தால் சுப்புத் தாய் போன்ற கலைஞர்கள் பலர் உருவாகுவார்கள்.
தொடர்புக்கு சுப்புத்தாய் : 9003453468
திருநெல்வேலியிலிருந்து பரமேஸ்வரன், மரிய செல்வம்.